30-07-2011 மத்திய அரசே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பப் பெறு – அய்ஃபக்டோ கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்






30.07.2011 அன்று மாலை 5.30 மணியளவில் மதுரை காளவாசலில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதாவினை எதிர்த்தும், புதிய திருத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளைக் களைய கோரியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளில் அய்ஃபக்டோ பரிந்துரைத்த மாற்றங்களை செய்திடக் கோரியும், தாராளமயம் மற்றும் தனியார்மயத்தினை உயர்கல்வியில் புகுத்திடும் கொள்கைகளுக்கு எதிராகவும் என அய்ஃபக்டோ கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூட்டா இரண்டாம் மண்டலத் தலைவர் முனைவர். தேன்பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மண்டலத் தலைவர் முனைவர்.முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மண்டல முன்னாள் தலைவர் பெரியதம்பி, அழகப்பா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பேரா.வீரராகவன், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் பொதுச்செயலாளர் முனைவர்.இளங்கோவன் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் முனைவர். சீனிவாசன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மண்டலச் செயலாளர் திரு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் கோகுல்நாத் பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்பிடக் கோரியும், கடந்த ஐந்தாண்டுகளில் பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட துணைவேந்தர் நியமனம், ஆசிரியர் பணியிடத்தினை நிரப்புதல், மாணவர் சேர்க்கை மற்றும் புதிய கல்லூரிகள், வகுப்புகளுக்கு அனுமதி அளித்திட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை செய்திட மாநில அரசினை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மூட்டாவின் மாநிலத் தலைவர் விவேகானந்தன் ஆர்ப்பாட்டத்தை நிறைவுரையாற்ற மூட்டா முதலாம் மண்டலச் செயலாளர் செந்தாமரை கண்ணன் நன்றி கூறினார்.